July 2, 2025
தண்டோரா குழு
இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்’ எனும் இந்தியாவின் மிகப்பெரும் குதிரை தடை தாண்டும் போட்டியை கோவையில் வரும் ஜூலை 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடத்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை அவிநாசி சாலை நவ இந்தியாவில் உள்ள அலெக்ஸ்சாண்டர் இக்வெஸ்ட்ரியன் கிளப்பில் நடைபெற்றது. இதில் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு-வின் தலைவர் A.S. சக்தி பாலாஜி செய்தியாளர்களிடம் நிகழ்ச்சியை பற்றி விளக்கினார்.
அவர் பேசுகையில் கூறியதாவது:-
ஒரு நாட்டில் உள்ள புவியியல் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்திய அணிகளை கொண்டு நடைபெறும் உலகின் முதல் மிகப்பெரும் குதிரை தடை தாண்டும் போட்டியாக இந்த ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்’ 2025 இருக்கப்போகிறது.
இது வரும் ஜூலை 4-6 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டம் வெள்ளானைப்பட்டி-யை அடுத்த மோளப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ‘பிசைட் தி இக்வெஸ்ட்ரியன் க்ரஸ்ட்’ எனும் தனியார் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் இந்தியாவின் 6 மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்துள்ள அணிகள் பங்கேற்கின்றன.அவை சென்னை புல்ஸ் (தமிழ் நாடு),பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் (கேரளா),பெங்களூரு நைட்ஸ் (கர்நாடகா),கோல்கொண்டா சார்ஜ்ர்ஸ் (தெலுங்கானா),குவாண்டம் ரெய்ன்ஸ் (கோவா) மற்றும் எலீட் இக்வெஸ்ட்ரியன்ஸ் (மேற்கு வங்காளம்)
அனைத்து அணிகளிலும் திறமையான, மிக பெரும் அளவில் சாதனை செய்துள்ள குதிரையேற்ற வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் தங்கள் குதிரைகளுடன் இந்த லீக் போட்டியில் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளனர்.
இந்த நிகழ்வில் நடைபெறும் குதிரை தடை தாண்டுதல் போட்டிகள், 110 சென்டிமீட்டர் மற்றும் 120 சென்டிமீட்டர் என 2 பிரிவுகளாக நடைபெறும். சர்வதேச குதிரையேற்ற கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற நடுவர்களான திரு. கரன்தீப் மற்றும் திரு. சமீர் இந்த நிகழ்வில் நடுவர்களாக செயல்படுவர்.
துவக்க நிகழ்வு ஜூலை 4ம் தேதி நடைபெறும்.நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கோவையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் உடன் சேர்ந்து இந்த போட்டிகளை துவக்கி வைப்பார்.
நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தில் 2000 பேர் வரை அமர்ந்து போட்டிகளை பார்க்க முடியும். மொத்தம் 3000 பேர் அங்கு கூடவும் இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசிய வசதிகளும் – தண்ணீர், சிற்றுண்டி, கழிவறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளன. நிகழ்வின் இறுதி நாளில் கேரளாவின் விளையாட்டு துறை அமைச்சர் அப்துரஹிமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளையும் அவர் வழங்கவுள்ளார்.
இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி குடும்பமாக அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இருக்கும். குதிரையேற்ற போட்டிகள் மேல் ஆர்வம் உடையவர்கள், விலங்குகள் மேல் பிரியம் கொண்டவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை காணவேண்டி, இலவச டிக்கெட்கள் வழங்கப்படவுள்ளன. டிக்கெட்களை ticketprix.com. எனும் இணையதளத்தில் பெறலாம், இவ்வாறு அவர் கூறினார்.