May 7, 2025
தண்டோரா குழு
வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோவையில் நடைபெறவுள்ள குதிரையேற்ற விளையாட்டு போட்டிகளான ‘போலோ ப்ரிமியர் லீக்’ மற்றும் ‘எக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்’ நிகழ்வுகளில் பங்கேற்க, கோவையை சேர்ந்த குதிரையேற்ற விளையாட்டு நிறுவனமான ‘பெகாசஸ் ஸ்போர்ட்ஸ்’, இன்று அதன் பிரத்தியேக குதிரையேற்ற அணியை அறிமுகம் செய்தது.
கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், பி அண்ட் எஸ் குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரியங்கா சுந்தர் இந்த அணியை அறிமுகம் செய்து வைத்தனர்.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர். அரங்கத்தில் நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்வில், நடிகர் சாந்தனு பாக்யராஜ், சின்னதிரை பிரபலம் கீர்த்தி சாந்தனு, ஐ.ஹெச்.எஸ். தமிழ் நாடு அமைப்பின் தலைவர் சக்தி பாலாஜி; எக்ஸ்போ வான் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மஹேந்திரன் மற்றும் ஒலிம்பிக் குதிரையேற்ற வீரர் இம்தியாஸ் அனீஸ் கலந்து கொண்டனர்.
இந்த 2 லீக் நிகழ்வுகளில் குதிரையேற்ற விளையாட்டுகளான போலோ மற்றும் ஷோ ஜம்பிங் போட்டிகளில் கலந்து கொள்ள ‘பெகாசஸ் கேரளா’ எனும் அணி இந்த நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அணி தமிழ்நாடு, மும்பை, டெல்லி,கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா மற்றும் குஜராத் மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்யும் அணிகளுடன் விரைவில் போட்டியிட உள்ளது.
‘போலோ ப்ரிமியர் லீக்’ மற்றும் ‘எக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்’ போட்டிகள் எக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் – அமைப்பால் நடத்தப்பட உள்ளது. இவை ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை கோவையில் நடக்க உள்ளது. அதில் முதலாவதாக ஷோ ஜம்பிங் போட்டிகள் ஜூன் மாதத்தில் நடத்தவும், போலோ போட்டிகளை ஜூலை மாதத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பெகாசஸ் கேரளா அணியின் வீரர்கள் இந்த 2 பிரிவுகளிலும் பங்கேற்க உள்ளனர்.
கேரளா-வுக்கு பெகாசஸ் நிறுவனம் சார்பில் போலோ விளையாட்டை கொண்டுவருவதில் பெருமைப்படுவதாக ஆர்.சுந்தர் கூறினார். பெகாசஸ் கேரளா அணியில் அனுபவம் மிகுந்த விளையாட்டு வீரர்களும், வளரும் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். தேசிய அளவில் போலோ ப்ரிமியர் லீக் மற்றும் எக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் போட்டி கவனம் பெற்று வரும் நிலையில், பெகாசஸ் கேரளா அணி நிச்சயமாக இந்த விளையாட்டின் மேல் ஆர்வம் கொண்டோரின் விருப்ப அணியாக விளங்கும் என நம்புவதாக அவர் கூறினார்.
இந்தியா முழுவதும் போலோ விளையாட்டை எடுத்து செல்லும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக இதை பார்ப்பதாக பிரியங்கா சுந்தர் கூறினார். பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மூலம் இதற்கான அணியை உருவாக்குவதை தாண்டி, ஒரு இயக்கத்தை உருவாக்கி வருவதாக தான் கருதுவதாக அவர் கூறினார்.
இந்த அறிமுக நிகழ்வில் பல்வேறு விருந்தினர்கள், பெகாசஸ் கேரளா அணிக்கு ஸ்பான்சர் மற்றும் முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.