 January 31, 2025
January 31, 2025  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                கோவையில் உள்ள சி.எஸ். அகாடமியின் மாணவர்களான ஷிவி விக்ரம் மற்றும்  பிரணவ் இளங்கோ ஆகியோர் 2023-24  ஆண்டுக்கான கேம்பிரிட்ஜ் சர்வதேச கணிதத் தேர்வு தேர்வில் உலகளவில் சாதனை படைத்துள்ளனர். இம்மாணவர்களை பாராட்டவும், இந்த சாதனை குறித்த செய்தியாளர் சந்திப்பும்  வெள்ளிக்கிழமை (31.1.25) அன்று திருச்சி சாலையில் உள்ள இப்பள்ளியின் கிளையில் நடைபெற்றது. 
சி.எஸ்.அகாடமியின் இயக்குநர் டாக்டர் விக்ரம் ராமகிருஷ்ணன் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மாணவி ஷிவி விக்ரம் சர்வதேச பள்ளி பாடத்திட்டத்தில் ஏ.எஸ். என்கிற உயர் நிலையில் (நமது பாடத்திட்டத்தில் 11ம் வகுப்புக்கு இணையாக உள்ள வகுப்பு) பயில்கிறார்.அவர் 2023-24 தேர்வுகளில் கணிதத்தில் சர்வதேச அளவில் முன்னிலை பெற்றுள்ளார்.இந்தியாவில் வெறும் ஐந்தே மாணவர்கள் தான் உலக அளவில் கணிதத்தில் முன்னிலை பெற்றுள்ளனர். அதில் ஷிவியும் ஒருவர்.
அதே போல, ஐ.ஜி.சி.எஸ்.இ. எனும் நிலையில் (நமது பாடத்திட்டத்தில் 10ம் வகுப்புக்கு இணையாக உள்ள வகுப்பு) பயிலும் மாணவர் பிரணவ் இளங்கோவும் 2023-24 தேர்வுகளில் கணிதத்தில் சர்வதேச அளவில் முன்னிலை பெற்றுள்ளார். இவர் இந்தியாவில் முன்னிலை பெற்ற வெறும் 30 பேர்களில் ஒருவராக உள்ளார். 
இந்த இமாலய சாதனைக்காக பாராட்டு விழா நடத்தி இரு மாணவர்களையும் வாழ்த்தி, அவர்களுக்கு பள்ளி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் அடைய விரும்பும் தரவரிசைகளை அடைய இந்த மாணவர்களை தயார்படுத்திய கணிதத் துறை ஆசிரியர்களின் பங்களிப்பையும் போற்றும் வகையில் பள்ளி சார்பில் கணித ஆசிரியர்களான தாசரி சைதன்யா மற்றும் மோகன பிரியா ஆகியோருக்கு அவர்களின் சிறந்த வழிகாட்டுதலுக்காக சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களை இந்த உயரத்தை அடைய பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளித் தலைவர் சோனி தாமஸ் மற்றும் முதல்வர் சாந்தப்ரியா முன்னிலையில் அகாடமியின் இயக்குநர் டாக்டர் விக்ரம் ராமகிருஷ்ணன் பாராட்டி கௌரவித்தார்.