February 17, 2023
தண்டோரா குழு
ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை நடை பயணமான பாரத் ஜோடோ யாத்திரை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.எஸ்.டி. பிரிவின் தேசிய தலைவர் ராஜேஸ் லிலோத்தியா கோவையில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சியின் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பேச கோவை விமான நிலையம் வந்த காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.எஸ்.டி.பிரிவின் தேசிய தலைவர் ராஜேஸ் லிலோத்தியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை நடை பயணமான பாரத் ஜோடோ யாத்திரை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் எனவும்,இந்தியாவில் தற்போது நிலவி வரும் வேலையின்மை,விலை வாசி உயர்வு, பணவீக்கம்,ஜிஎஸ்டி ஆகியவற்றால் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. சாதி, மதம், மொழி,உணவு, உடை ஆகியவற்றின் பெயரால் சமூகம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது.
விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதால் நாட்டில் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த மூன்றுக்கும் எதிராக இந்தியாவை ஒருங்கிணைக்கும் பயணமாக ராகுல் காந்தியின் நடைபயணம் இருந்ததாக கூறிய அவர்,அரசியல் வரலாற்றில் இது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சில குறிப்பிட்ட தொழில் அதிபர்களை வளர்க்கும் விதமாக செயல்படுவதாகவும், நாட்டில் உள்ள நடுத்தர மற்றும் ஏழை தொழிலாளர்கள் நிலையை பற்றி மத்திய அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை என குற்றம் சாட்டினார்.
முன்னதாக விமான நிலையம் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி.எஸ்.டி.துறையின் தலைவர் எம் பி ரஞ்சன் குமார்,துணைத் தலைவர் காந்தி , மாநில பொதுச் செயலாளர் கானா பிரியா மற்றும்,பேரூர் மயில், அசோக், ராஜா பழனிச்சாமி,சொக்கம்புதூர் கனகராஜ், சரவணகுமார்,ஆனந்த்,சக்தி சதீஷ், மதியழகன், சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.