January 11, 2017 தண்டோரா குழு
தமிழக மக்களின் பிரதிநிதியாக கேட்கிறேன் ஜல்லிகட்டு போட்டியை அனுமதியுங்கள் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்சு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தில்
” ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளின் கண்களில் எரிச்சலூட்டும் பொடியை தூவுதல், மாட்டை அடித்தல், அதன் வாலை திருகுதல், சிலபாகங்கள் மீது அடித்தல், மது கொடுக்கப்படுகிறது போன்ற குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் நான் இதுபோன்ற எந்த ஒரு துன்புறுத்தலையும் காளைகள் மீது நடத்தப்படுவதை பார்த்ததில்லை. அதனால் தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஒத்துழைக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுகள் மீது தழுவிச் செல்லும் வீரர்கள் சில அடிகளில் மீண்டும் இறங்கி விடுகின்றனர். ஆனால் மீன் பிடிப்பவர்கள் அதை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்ததும், அதற்கு ஆக்ஸிஜன் இல்லாமல் அது துடிதுடித்து சாகின்றது.அதை சமைத்து சாப்பிடவும் செய்கின்றோம். அதுமட்டுமில்லாமல் மாடுகளை கொன்று சாப்பிடுகின்றோம். அதற்கு அப்போது வலிக்காதா, அதை தடை செய்ய முடியுமா, இந்த விளையாட்டை நேசிக்கும் பல தமிழ் மக்களின் பிரதிநிதியாக நான் கேட்கின்றேன். இதை அனுமதியுங்கள்.”
இவ்வாறு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.