• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்காநல்லூர், சாய்பாபா காலனியில் விரைவில் மேம்பால பணிகள் துவங்கும்

January 31, 2023 தண்டோரா குழு

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், அலுவலகம் செல்வோர், அன்றாட பணிகளுக்காக வெளியில் செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதுதவிர, மழை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் முக்கிய சாலைகளில் வாகனங்கள் பல மணி நேரம் அணிவகுத்து நிற்கின்றன.கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவை-திருச்சி சாலையில் ரூ.250 கோடி செலவில் ரெயின்போ பகுதியில் துவங்கி பங்கு சந்தை வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதற்காக, மொத்தம் 111 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக 17.20 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சுங்கம் பகுதியில் மட்டும் மேம்பாலத்தின் அகலம் 19.60 மீட்டராக உள்ளது. மேலும், கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.66 கோடியில் நடைபெற்ற மேம்பால பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

இதேபோல், கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.கோவை மாநகரின் பிரதான சாலையாக கருதப்படும் அவினாசி சாலையில் விமான நிலையம், பல்வேறு கல்லூரிகள்,பள்ளிகள்,தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், டைடல் பார்க் போன்றவை அமைந்துள்ளன.சேலம், ஈரோடு, திருப்பூர் என பல முக்கிய நகரங்களுக்கும் முக்கிய வழித்தடமாகவும் இருப்பதால் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் 10.10 கிமீ நீளத்தில் இந்த பறக்கும் பாலம் அமைக்கப்படுகிறது.

இப்பாலப் பணிகளில் 5 முக்கியமான இடங்களில் சுரங்க நடைபாதையும் அமைக்கப்பட உள்ளது.மேலும் மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் பகுதியில் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவையில் காளப்பட்டி ரோடு சந்திப்பு, சிங்காநல்லூர், சாய்பாபா காலனி என மேலும் 3 இடங்களில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

இது தொடர்பாக அன்மையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடைபெற்றது. இதனை அடுத்து தற்போது இந்த மேம்பால பணிகள் துவங்கும் பணிகள் விரைவில் நடக்க உள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை காளப்பட்டி ரோடு சந்திப்பில் இருந்து துடியலூர் ரோடு சந்திப்பு வரை 1.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமார் ரூ.60 கோடியே 40 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. சிங்காநல்லூர் உழவர் சந்தை முதல் ஜெயசாந்தி தியேட்டர் வரை 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.140 கோடியே 80 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
சாய்பாபா காலனி சந்திப்பில் சுமார் ரூ.50 கோடியே 93 லட்சம் மதிப்பில் 1.14 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது. 3 மேம்பாலங்களும் மொத்தம் சுமார் ரூ.252 கோடி மதிப்பில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 3 மேம்பாலங்களுக்கும் அதிக அளவில் நிலம் கையகப்படுத்த வேண்டிய தேவை இருக்காது. இந்த மேம்பாலங்கள் கட்டும் பணி விரைவில் துவங்க வாய்ப்பு உள்ளது. புதிதாக இந்த 3 மேம்பாலங்கள் கட்டப்பட்டால் திருச்சி ரோடு, காளப்பட்டி ரோடு, சாய்பாபா காலனி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பெரும் அளவு போக்குவரத்து நெரிசல் குறையும்.
இந்த 3 மேம்பாலங்களின் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ள நிலையில் மெட்ரோ ரயில் வழித்தடம் இப்பகுதிகளில் அமைந்தால் அதனால் மேம்பாலப் பணிகள் பாதிக்காமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க