• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்டர்லி முறை இன்னும் பின்பற்றப்படுகிறதா? காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி கேள்வி

March 20, 2018 தண்டோரா குழு

ஆர்டர்லி முறையை இன்னும் கடைபிடிக்கிறீர்களா? என்பது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

காவலர்களின் குறைகளை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மனநல மருத்துத்துவர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று 2012-ம் ஆண்டின் உத்தரவை நடைமுறை படுத்த கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்த போது குழு அமைத்தது தொடர்பான அறிக்கையை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், நிபுணர்கள் குழு அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாக அரசு தரப்பு கூறியதையடுத்து,கோபமடைந்த நீதிபதி கிருபாகரன், குழு அமைப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளாதது கண்டனத்திற்கு உரியது என்றார்.மேலும்,எத்தனை பேர் தற்போது உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்? என்பதனை அடுத்த விசாரணையின் போது அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டியிருக்கும் டிஜிபி, ஆர்டர்லி முறை பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு, ஏ.டி.ஜி.பி-க்கள், காவல் ஆணையர்கள், ஐ.ஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட, அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும், FAX மூலம் அறிக்கை அனுப்பியிருக்கிறார்.

அதில், ஆர்டர்லி முறையை ரத்து செய்து 1979 ஆண்டு அரசு பிறப்பித்த அரசாணை பின்பற்றபடுகிறதா? இல்லையா? அப்படி ஒருவேளை 1979ஆம் ஆண்டே ஆர்டர்லி முறை ரத்தாகியிருந்தால், அந்த முறை எப்படி இன்னும் தொடர்கிறது என்றும் கேட்டுள்ளார்.பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளின் இல்லங்களில், எத்தனை காவலர்கள், ஆர்டர்லியாக பணியாற்றுகின்றனர் என்று பதில் அளிக்குமாறு டிஜிபி கேட்டிருக்கிறார்.

அதைபோல், அமைச்சர்கள், நீதிபதிகள் வீடுகளில் அமர்த்தப்படுவது போல் காவல் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் வீட்டில் அலுவலக உதவியாளர்கள், வேலை ஆட்களை பொதுப்பணித் துறையிலிருந்து ஏன் அமர்த்தவில்லை? என்றும் இவை தவிர மேலும் சில தகவல்களை எண்ணிக்கையாக அளிக்கும்படி டிஜிபி உத்தரவிட்டிருக்கிறார்.

அதில், கடந்த 10 ஆண்டுகளில் காவல்துறை பணியிலிருந்து, சொல்லாமல் வேலையைவிட்டு ஓடியவர்கள் எத்தனை பேர்? என்றும், கடைசி 10 ஆண்டுகளில் பணியிலிருந்து எத்தனை காவலர்கள் நீக்கப்பட்டுள்ளனர்? கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட போலீஸார் எத்தனை பேர்? என்றும், கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் பணியிலிருந்தபோது மரணம் அடைந்த காவல்துறையினர் எத்தனை பேர்? என்றும், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கேட்டுள்ளார்.

 

மேலும் படிக்க